ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே குஜராத் வந்தார் : பிரதமர் மோடி வரவேற்பு

பதிவு செய்த நாள் : 14 செப்டம்பர் 2017 03:16

அகமதாபாத்,
ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று குஜராத் வந்தார். அகமதாபாத் வந்த ஷின்ஸோ அபே மற்றும் அவரது மனைவி அகி அபேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமைச்சர்கள் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டத்தை துவங்கி வைக்கவும் 12வது இந்திய- ஜப்பான் மாநாட்டில் கலந்துகொள்ளவும் ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே அவரது மனைவி அகி அபேவுடன் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்தடைந்தார்.

அகமதாபாத் விமானநிலையத்திற்கு வந்த பிரதமர் ஷின்ஸோ அபேயை பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சியுடன் கட்டிப்பிடித்து வரவேற்றார். அவருடன் பல அமைச்சர்களும் சில புத்த மத தலைவர்களும் ஜப்பான் பிரதமரை வரவேற்க விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.

விமான நிலையத்தில் ராணுவத்தினர் அளித்த மரியாதையை பிரதமர் ஷின்ஸோ அபே ஏற்றுக்கொண்டார். பின் அவரை வரவேற்கும் விதமாக குஜராத்தின் பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடைபெற்றது.  

விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஜப்பான் பிரதமர் நேராக மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்துக்கு பிரதமர் மோடியுடன் காரில் ஊர்வலமாக சென்றார். ஆசிரமம் செல்லும் வழியில் இரு பிரதமர்களையும் காண சாலையின் இருபுறமும் மக்கள் திரண்டிருந்தனர். வெளிநாட்டு தலைவர் ஒருவருடன் மோடி ஊர்வலம் செல்வது இதுவே முதல்முறையாகும். வழியில் ஆங்காங்கே அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலைநிகழ்ச்சிகளை இரு பிரதமர்களும் கண்டுகளித்தனர். ஊர்வலத்தின் போது ஜப்பான் பிரதமரும் அவர் மனைவியும் இந்திய உடைகளை அணிந்திருந்தனர்.


சபர்மதி ஆசிரமத்தை அடைந்த ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே, அங்குள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினார். பின்  பிரதமர் மோடி ஷின்ஸோ அபேவுக்கு ஆசிரமத்தை சுற்றி காட்டினார். சபர்மதி நதிக்கரையில் இரு தலைவர்களும் அமர்ந்து பேசினார்கள். ஜப்பான் பிரதமரின் வருகையை முன்னிட்டு அகமதாபாத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாளை மும்பை - அகமதாபாத் இடையேயான முதல் புல்லட் ரயில் திட்டத்தின் அடிக்கல் நாட்டும் விழாவில் ஷின்ஸோ அபே கலந்துகொள்கிறார். ஜப்பான் உதவியுடன் செயல்படுத்தப்படும் இந்த திட்டம் வரும் 2022ம் ஆண்டுக்குள் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 12வது இந்திய – ஜப்பான் மாநாட்டில் 15 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என குஜராத் தலைமை செயலாளர் ஜே.என்.சிங் தெரிவித்துள்ளார்.