பார்த்தது படித்தது ரசித்தது – சுதாங்கன் – 3–9–17

பதிவு செய்த நாள் : 03 செப்டம்பர் 2017

பார்த்தது!

நம் நெல்லைக்கார பெரிய வர்களும், நெல்லைக்கார நடுத்தர வயதினரும், சில பெண் தமிழ் பேராசிரியர்களும், நெல்லை கண்ணன் போன்ற பெயரிலேயே நெல்லையின் பெருமை தாங்கி வருபவர்களையும் தவிர, மற்றவர்களுக்கு நெல்லையின் பெருமை தெரிவதில்லை. எத்தனை அறிஞர்கள் அந்த நாளிலிருந்து இந்த நாள்  வரை பொருநையாற்றுக் கரையிலிருந்து வேறு ஊர்களுக்கு புலம் பெயர்ந்திருக்கிறார்கள் தெரியுமா?  நான் ஒன்றை கவனித்திருக்கிறேன். நான் சென்னையில் படிக்கும் போது அண்ணாச்சி கடைகள் இருக்கும். குறிப்பாக, எங்கள் திருவல்லிக்கேணி பெரிய தெருவில் நான் படித்த இந்து உயர்நிலைப் பள்ளிக்கு பக்கத்தில் எல். ராமசாமி நாடார் பாத்திரக் கடை இருக்கும். அப்போதெல்லாம் பள்ளிக்கு போக அலுமினியத்தினாலான பாக்ஸை அந்த பாத்திரக் கடையில்தான் அம்மா வாங்குவார். அம்மா பேரம் பேசும் போது, `என்ன அண்ணாச்சி! ஒரே ஊர்க்காரங்க, கொஞ்சம் விலையை பாத்து கொடுத்தாத்தானே நாளை பின்னே கடைக்கு வருவோம்? நம் ஊர் கடைன்னு ஒரு பாசமும் வளராதா?’  உடனே அண்ணாச்சி அம்மாவின் பூர்விகம் பற்றி விசாரித்தார். அம்மா ஊரைச் சொன்னவுடன் நான் உங்கள் ஊருக்குள்ள இருக்கிற மாவுடுப் பண்ணை (அந்த ஊரைத்தான் சொன்னதாக நினைவு. ஆக மொத்தம்   நெல்லை மாவட்டம். அப்போது துாத்துக்குடியிலிருந்து பிரியவில்லை)

 என் சின்ன வயதில் மட்டுமல்ல, எந்த கடைக்கு போனாலும், ஒரு ஆட்டோவில் ஏறினாலும்,   ஒரு ஓட்டல் சிப்பந்தி பேச்சை வைத்து, நீங்கள் நெல்லையா என்று கேட்டால் அவர்களுக்கு கண்களில் ஒரு பெருமைமிதம் பூக்கும்! இப்போது இதை சொல்லுவது எதனால்? இன்னும் ஆறு நாட்களில் பாரதியார் நினைவு நாள்.  ‘அது எப்படி எட்டயபுரத்தில் மட்டும் ஒரு கருப்பை நெருப்பை சுமந்தது?’ என்று கவிஞர் வைரமுத்து கவிராஜன் கதையில் ஆரம்பித்திருப்பார். ஆங்கிலக் கும்பினியாருடன் போர் புரிந்த வீரபாண்டிய கட்டபொம்மனின், பாஞ்சாலங்குறிச்சியும் நெல்லை மாவட்டம்தான். பின்னால் தோன்றிய  கப்பலோட்டிய தமிழனுக்கும் நெல்லை சீமைதானே. எட்டயபுரம் சுப்பையா என்று மட்டும் அந்த நாளில் பாரதியாரை அறிந்து வைத்திருந்தது நெல்லை சீமை! தேமதுரத் தமிழோசை  உலகமெலாம் பரவும்  வகை செய்தல் வேண்டும் என்பது நெல்லையின் ஆசைதான்.  அந்த ஆசைக்கும் குரல் கொடுத்தவர் பாரதியார்தான்.  பாரதியாருக்கு சமதர்ம சிந்தனை உருவானதற்கு  ஒரு வகையில் நெல்லை மாவட்டம்தான் காரணம். ரட்சண்ய யாத்ரீகம் பாடிய கவிஞரும் நெல்லையை சேர்ந்தவர்தான்.  சீறாப்புராணம் பாடிய இஸ்லாமிய கவிஞரும் நெல்லைக்காரர்தான்.  இவர்களின் பாடல்கள் பாரதியாருக்குள் போய் இறங்கியிருந்ததால்தான் அவருக்கும் மதவெறி உள்ளே போகவேயில்லை.

ஜாவா தீவில் இருக்கும், போர்னியா தீவில் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நதியின் பெயரும் `பொர்நை’ என்கிறார் பரசு நெல்லையப்பர். அப்படியானால், நெல்லைக்காரர்கள் வெளிநாடெல்லாம் போய் வந்திருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது. நம்மூர்க்காரர்கள் அங்கே போனதால் இங்கே ஒரு பொருநை இருப்பது கேள்விப்பட்டு அவர்கள் நதிக்கே ‘போர்னியா’ என்று பெயர்  வைத்து விட்டார்கள்.  இன்னும் இரண்டு நாட்களில் பாரதியின் நினைவு நாள். 1928ம், ஆண்டு மறைந்தார்

படித்தது!

1982ம் வருடம் அப்போது எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு ம.பொ.சி. மீது ஒரு ஈர்ப்பு உண்டு. 3ம் வகுப்பு மட்டுமே படித்த

ம.பொ.சி. அச்சாபீசில் கம்பாசிடராக பணியாற்றி அதன் மூலமாக தமிழை கற்றுக்கொண்டார்.  1982ம் ஆண்டு சென்னை பாரதீய வித்யா பவனில் தொடர்ந்து பாரதியைப் பற்றி சொற்பொழிவாற்றினார்.  அந்தப் பேச்சு அப்போது மனதில் ஆழமாக பதியவில்லை. பாரதி நினவு நாள் என்றதும் புத்தக அலமாரியில் இருந்த ‘பாரதியார் பற்றி ம.பொ.சியின் பேருரை’ என்ற பெயரில் இருந்த புத்தகத்தை கொஞ்சம் புரட்டினேன்.

காலந்தோறும் தமிழினத்தின் தேவையைப் பூர்த்தி செய்ய வாழையடி வாழைெயனக் கவிஞர்களை தந்து வந்த தெய்வம். இரண்டாம்- நுாற்றாண்டின் தொடக்கத்திலும், தேசபக்தி மதத்தின் தேவையை நிறைவு செய்ய  ஒரு கவிஞனைத் தந்தது – சி. சுப்ரமணிய பாரதியாரின் வடிவத்திலே.   எந்த அந்தண வருணமானது தமிழுக்கு இலக்கணம் படைக்க அகத்தியரைத் தந்ததோ,  புறச்சமயங்களிலிருந்தும்    சைவத்தைக் காக்க ஞான சம்பந்தரைக் கொடுத்ததோ, அதே வருணந்தான் புதிதாக தோன்றிய தேசபக்தி என்னும் மதத்தை வளர்க்கவும் சுப்ரமணிய பாரதியாரைத் தந்தது.  தேசபக்தி என்னும் மதத்தின்  முதல் மகனாக வ.உ. சிதம்பரனாரை எந்த நெல்லை மாவட்டம் தந்ததோ, அதே மாவட்டந்தான் தேசபக்தி என்னும் மதத்திற்கு திருமந்திரம் பாட தேசியக் கவி பாரதியைத் தந்தது.

ஆம்! பரங்கியராட்சியுன்     வீழ்ச்சிக்கு  பரணி பாட பாரதி பிறப்பதற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பே, ஏகாதிபத்தியத்தை  எதிர்த்து பாசறை அமைக்க சிதம்பரனார் பிறந்துவிட்டார்,  நெல்லை மாவட்டத்திலே! தேசபக்தி என்னும் புதிய மதம் தந்த தேசியக் கவியான பாரதியார், தமிழனத்தின் தேவையை பூர்த்தி செய்யவே தான் தோன்றியதாக கூறினார். `புவியனைத்தும்  போற்றிடவன் புகழ் படத்துத் தமிழி மொழியை புகழிலேற்றும் கவியரசர் தமிழ்நாட்டுக்கு இல்லையெனும் வசையென்னாற் கழிந்ததன்றோ’ என்று பாடுகின்றார். இது எட்டயபுரத்து அரசருக்கு பாரதியார் எழுதிய பாடலில் உள்ளது. பாரதி `தேசியக் கவி,’ `மகாகவி,’ `புரட்சிக்கவி’ என்னும் பட்டங்களையெல்லாம் பெறுவதற்குத் தகுதி வாய்ந்தவர் என்றாலும் அவர் விரும்பியது   ‘கவியரசர்’ என்னும் பட்டத்தைத்தான் போலும்!  அதனை எட்டயபுத்து அரசருக்கு எழுதிய கடிதத்தில் அவரே கூறுகிறார்.  தாம் தோன்றிய காலத்திலே தமிழ் மொழியின் தேவை இன்னும்  அதிகமாக இருந்தது என்பதனையும் எட்டயபுரத்து அரசருக்கு கவிதையிலே கூறுகின்றார். ‘கலை புதிது, பொருள் புதிது, வளம் புதிது சொல் புதிது, சோதிமிக்க நவகவிதை எந்நாளும் அழியாத மகாகவிதை.’

பாரதிக்கு முன்னே தமிழிலே சுவைமிக்க கவிஞன் இல்லையா? பொருட்செறிந்த கவிதை இல்லையா? இருந்தன. ஒன்றா, இரண்டா, பத்தா, நுாறா, பதினாயிரமா? லட்சம் லட்சமாக இருந்தன. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினென்கீழ்க்கணக்கு இருந்தன. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை,

பதினென்கீழ்க்கணக்கு என்னும் தொகை நுால்கள் இருந்தன. இடைக்காலத்தில் ஐம்பெருங்காப்பியங்கள் தோன்றின. புராணங்களுக்கும் குறைவில்லை. தேவாரம், திருவாசகம் போன்ற தோத்திர பாடல்கள் கொஞ்சமல்ல. ஆனால், அவற்றிலெல்லாம் புரட்சி கரமான கொள்கைகளைக்  கூறும் நவகவிதைகளும்  படைத்தளித்தார் பாரதியார்.

ரசித்தது!

பாரதி பற்றி கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜீவா, அரசியலோடு, இலக்கியத்தின்  மீதும் கவனத்தை பதிக்கத்துவங்கினார்.  பாரதி மீதும் அவரது படைப்புக்கள் மீதும், அவளவிலா காதல் கொண்ட ஜீவா  வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் பாரதியின் புகழ் பாடுவதை வழக்கமாக்கிக் கொண்டார். ஜீவாவுக்கும் நாகர்கோவிலுள்ள பூதப்பாண்டிதான் சொந்த ஊர். 1947ம், ஆண்டு, அக்டோபர் 14ல் எட்டையபுரத்தில் கல்கியின் முயற்சியினால் பாரதி மணி மண்டபம் உருவாக்கப்பட்டது.

அப்போது கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி, இந்த விழாவிற்கு தலைமை தாங்கினார். பேச்சாளர் பட்டியலில் ஜீவாவின் பெயர் இல்லை. இருப்பினும் இந்த விழாவில் ஜீவா கலந்து கொண்டார். அப்போது அந்தப் பகுதியின் சட்டசபை உறுப்பினர் சசிவர்ண தேவர் முயற்சியினால் ஐந்து நிமிடங்கள் பேச ஜீவா அனுமதிக்கப்பட்டார். ஆனால், ஜீவா ஏழு நிமிடங்கள் பேசி பெருத்த வரவேற்பைப் பெற்றார்.  இந்த மேடையில்தான் பாரதி பாடல்கள் பொதுவுடைமை ஆக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தினார் ஜீவா. காரணம், அப்போது பாரதியின் பாடல்கள் ஏ.வி. மெய்யப்ப செட்டியாரின் உரிமையாக இருந்தது.  தமிழ் சினிமாவில் முதன்முதலில் பாரதியார் பாடலை இடம்பெறச் செய்தவரும், நாடகமேடைகளிலும், பொது நிகழ்ச்சிகளிலும் பாரதியாரின் பாடல்களை பாடுவது லட்சியமாக டி.கே. சண்முகத்திடம் இருந்தது.

 அவ்வை டி.கே. சண்முகம் தனது பில்ஹணன் நாடகத்தில் பாரதியார் பாடல் `துாண்டிற் புழுவினை’ பாடலை பயன்படுத்தியிருந்தார். இதையறிந்த செட்டியார், ` பாரதியார் பாடல்களின் உரிமை என்னிடம் உள்ளது.  அதை நீங்கள் பயன்படுத்தக்கூடாது. மீறினால் நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடரப்படும்’ என்று கடிதம் அனுப்பினார். 1969ம் வருடம் டி.கே. சண்முகம் இந்த கடிதத்தை பெற்றார்.  உடனே எட்டயபுரம் பாரதி மணிமண்டப விழாவில் ‘பாரதியார் பாடல்களை நாட்டுடைமையமாக்கப்படவேண்டும்’ என்று பேசினார்.  அதை குறிப்பிட்டு செட்டியாருக்கு பதில் அனுப்பினார்.

 எழுத்தாளர்கள்  வல்லிக்கண்ணன், நாரண துரைக்கண்ணன்,

கே. டி. கணபதி, பேராசிரியர்

அ. சீனுவாசராகவன், நெல்லைக்கு சென்று பாரதியாரின் மனைவியையும், மகளையும்  சந்தித்து அனுமதி பெற்றனர். பின்னர்  அன்றைய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் காமராஜரிடம் உரிமை பெற்றனர்.  பிறகுதான் பாரதி பாடல்களுக்கு விடுதலை கிடைத்தது.

* * *