அட்டாக் பாண்டியின் 5 ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து மாவட்ட கோர்ட்டு உத்தரவு!

பதிவு செய்த நாள்

24
பிப்ரவரி 2016
18:48

மதுரை : 5 போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ள பல்வேறு வழக்குகளில் ஜாமீன் கேட்டு அட்டாக் பாண்டி தாக்கல் செய்த 5 மனுக்களை தள்ளுபடி செய்து மதுரை மாவட்ட கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை கீரைத்துறையை சேர்ந்தவர் அட்டாக் பாண்டி (வயது 42). தி.மு.க. பிரமுகர். இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி, நிதிநிறுவன உரிமையாளரை மிரட்டியது போன்ற சம்பவங்களுக்காக சுப்பிரமணியபுரம், பெருங்குடி, கோ.புதூர், கீரைத்துறை, மாவட்ட குற்றப்பிரிவு என பல்வேறு போலீஸ் நிலையங்களில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்தநிலையில் மதுரையில் கடந்த 2012-ம் ஆண்டு தி.மு.க. பிரமுகரான பொட்டு சுரேஷ் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக அட்டாக் பாண்டி சேர்க்கப்பட்டார். அவரை கைது செய்வதற்காக போலீசார் தேடினர். ஆனால் அவர் ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார். அவரை மும்பையில் வைத்து கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் 21-ந்தேதி போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் மதுரை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

பல்வேறு வழக்குகள் உள்ளதால் அட்டாக் பாண்டி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்தநிலையில் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி மதுரை 1-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் 5 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனு நேற்று நீதிபதி தீப்தி அறிவுநிதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் கோபாலகிருஷ்ண லட்சுமணராஜூ, மணிகண்டன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அவர்கள் கூறுகையில், ‘பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் அட்டாக் பாண்டிக்கு தொடர்பு கிடையாது. அந்த சமயத்தில் சென்னை விடுதியில் தங்கி இருந்த அவரை மு.க.அழகிரி, அவரது மகன் சந்தித்து பேசி உள்ளனர். இதை வைத்து அவருக்கும் அந்த கொலைக்கும் தொடர்பு இருக்கிறது என்று கூற முடியாது. அதேபோல கோ.புதூர் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ள கொலை சம்பவத்தின்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அப்படி இருக்கும்போது அவருக்கு எப்படி அந்த கொலையில் தொடர்பு இருக்க முடியும். இவை தவிர மற்ற வழக்குகள் அனைத்தும் அவர் மீது போடப்பட்ட பொய் வழக்குகள். ஆகையால் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்என்று தெரிவித்து வாதாடினார்கள்.

அதன்பிறகு அரசு தரப்பில் ஆஜரான மாநில அரசு வக்கீல் சண்முகவேலாயுதம், அரசு வக்கீல்கள் குணசேகரன், தமிழ்செல்வன் ஆகியோர் வாதிடுகையில், ‘பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான அட்டாக் பாண்டி ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து உள்ளார். அவருக்கு முக்கிய பிரமுகர்களுடன் தொடர்பு உள்ளது. இவர் மூலமாக பணம் பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இவருக்கு ஜாமீன் வழங்கினால் அவர் மீதான வழக்குகளின் சாட்சிகளை கலைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஆகையால் ஜாமீன் வழங்க கூடாதுஎன்று தெரிவித்தனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அட்டாக் பாண்டியின் 5 ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.