கற்பழித்து கொலை செய்யப்பட்ட நர்சிங் மாணவி! மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு!

பதிவு செய்த நாள்

18
பிப்ரவரி 2016
20:03

மதுரை: நர்சிங் மாணவியை கற்பழித்து துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்த கொடூர ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மதுரை சிந்தாமணி, பனையூர் பகுதியை சேர்ந்த செல்லத்துரை மகள் சரண்யா (வயது 18). திருப்புவனத்தில் உள்ள நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று சரண்யாவை விடுமுறை எடுத்துக் கொண்டு  வீட்டில் இருந்தார்.

அப்போது மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் வீட்டிற்கு வரவில்லையாம். இதனால் சரண்யா ஆடுகளை தேடி கருவேலங்காட்டிற்குள் சென்றார்.

அங்கு மர்ம நபர்கள் சிலர் சரண்யாவை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று கற்பழித்தனர். இந்த சம்பவம் வெளியே தெரிந்தால் பிரச்சினை ஏற்படும் என்று நினைத்தனர். இதனால் அவர் அணிந்திருந்த துப்பட்டாவாலேயே கழுத்தை இறுக்கி சரண்யாவை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

வெகுநேரமாகியும் சரண்யா வீட்டிற்கு வராததால், அவரைத்தேடி அவரது தாயார் பாண்டியம்மாள் சென்றார். அங்கு காட்டிற்குள் மகள் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கதறி அழுதார். உடனே இது குறித்து சிலைமான் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

போலீசார் விரைந்து வந்து சரண்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இது குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜேயேந்திரபிதாரி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.