ஆறுமுகமங்கலம் கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி ரூ.4 கோடி நகைகள் தப்பின

பதிவு செய்த நாள் : 04 நவம்பர் 2017 01:04


ஏரல்:

 ஏரல் அருகேயுள்ள அறுமுகமங்கலம் கூட்டுறவு வங்கியில் நேற்று முன்தினம் இரவு கொள்ளை முயற்சி நடந்துள்ளது. லாக்கரை உடைக்கமுடியாமல் போனதால் ரூ.4 கோடி மதிப்புள்ள நகைகள் தப்பின.

துாத்துக்குடி மாவட்டம்

ஏரல் அருகேயுள்ள ஆறுமுகமங்கலத்தில் கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கியில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பல கிராம மக்கள் கணக்கு வைத்துள்ளனர். விவசாய பகுதி என்பதால் ஆயிரக்கணக்கான மக்கள் நகை கடன் பெற்றுள்ளனர். இதனால் இந்த வங்கியில் பணம் மற்றும் நகைகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் வங்கியில் சுப்பையா என்பவர் செயலாளராகவும் பணியாற்றிவருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் பணி முடிந்து மாலையில் வங்கியை பூட்டிவிட்டு ஊழியர்கள் சென்றுவிட்டனர். நேற்று காலையில் ஊழியர்கள் வேலைக்கு வந்த போது வங்கியின் ஜன்னல் கம்பி உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்சியடைந்தனர். உடனடியாக கதவை திறந்து உள்ளே சென்று ஊழியர்கள் பார்த்தபோது வங்கியில் உள்ள லாக்கரை உடைக்க முயற்சி செய்திருப்பதும் உடைக்கமுடியாமல் போனதால் வந்த வழியே கொள்ளையர்கள் தப்பிச் சென்றிருப்பதும் தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த செயலாளர் சுப்பையா ஏரல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வங்கிக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. லாக்கரை உடைக்கமுடியாமல் போனதால் சுமார் ரூ.4 கோடி மதிப்புள்ள நகைகள் தப்பின. இச்சம்பவம் ஆறுமுகமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.